Sunday, 29 December 2019

காதல் எல்லாத்தையும் மாத்தும்!

ஒரு 2 வருஷத்துக்கு முன்னாடி, சாப்பிடற அளவுக்கு நான் சமைப்பேன்னு சொன்னாலே சிரிச்சிருப்பேன். போன வருஷம் 3 வாரத்துக்கு டைம்டேபிள் போட்டு சமைச்சு பாத்தேன். சமையல் ஒண்ணும் அவ்வளவு கஷ்டமா இல்லயேன்னு தோணுனதால, அப்படியே விட்டாச்சு.. கல்யாணம் முடிஞ்சும் கிட்டதட்ட 2 1/2 வாரம் நான் சமைக்கல.. மாமியார் வீடு, அம்மா வீடு, அப்பறம் அவங்க இங்க வந்ததுன்னு நல்லா ஓபி அடிச்சாச்சு.. அதுக்கு அடுத்த வாரத்துல இருந்து பழையபடி டைம்டேபிள் போட்டோம்.

எல்லா விஷயத்துக்கும் உந்துதல் ஒண்ணு இருக்கனும். அது காதலாவோ, காதலிச்சவங்களோட சந்தோஷமாவோ, யாருடைய பாராட்டாவோ அல்லது வேற ஏதாவதாவோ இருக்கலாம்.

சமைக்கும்போது, முடிந்த வரை முதல் முறையே நல்லா செஞ்சுடனும்னு முயற்சி பண்ணுவேன். மனோக்கு பிடிக்கனும். அவ்ளோ தான்.

இங்க அவங்க பேசறத பாத்தா கடஞ்செடுத்த ஆணாதிக்கவாதி மாதிரி தெரியும். ஆனா அது போல பெண்ணியவாதி எவனுமே கிடையாது. ஏதோ ஒண்ணுனா ஹெல்ப் பண்றது தொடங்கி, எனக்கு பிடிச்சத செய்யறத motivate பண்றது, ஏதோ ஒரு சமயம் first time செய்யற டிஷ் சுமாரா வந்துட்டாலும் ஒதுக்காம சாப்பிடறதுன்னு. உண்மைய சொல்லனும்னா perfectஆ வரலானா நானே அத தொட மாட்டேன். அதனால தான், எப்போ புது டிஷ் சமைச்சாலும், அது கூடவே ஒரு பிடிச்ச ஏதாவதும் டைம்டேபிள்ல இருக்கும். But he is awesome. இதுவரை எதையுமே வேண்டான்னு சொன்னதில்ல..

அடிக்கடி நான் சொல்லுவேன், இதே வேற யாரையாவது கல்யாணம் பண்ணிருந்தா, ஆரம்ப காலத்துல சமைச்ச மாதிரி, அதே கேவலமான ரசத்த தான் ஊத்திருப்பேன்னு. மனோவும் அதே மாதிரி வேற யாரையாவது கட்டிருந்தா இவ்ளோ supportiveஆ நான் நடந்திருப்பனான்னு தெரியாதுன்னு சொல்லிருக்காங்க. ஏனோ, அத கேக்கும் போது ரொம்ப ஸ்பெஷலா தோணும்..

Mood swings, உளறல், கோவம், காதல், அழுகைனு எல்லாத்தையும் புரிஞ்சுக்க தெரிஞ்ச மனுஷன் ❤ கல்யாணமே பண்ண முடியாதுன்னு சொன்னவங்களுக்கு கல்யாணம் பண்ணி காட்டியாச்சு. 1 மாசம் கூட சேர்ந்திருக்க மாட்டங்கன்னு சொன்னவங்களுக்கு, 1 மாசத்த தாண்டியாச்சு.. அவங்களுக்கு இன்னும் பல வருஷங்கள் இதவிட அதிக அன்போட இருந்து காட்டுவோம். கொஞ்ச நாள் தான் இப்படி சமைக்க முடியும், 90 நாள் முடிஞ்சாலோ, குழந்த பிறந்தாலோ, இதெல்லாம் செய்ய முடியாதுன்னு சொல்றவங்களுக்கு அப்பறமா அத எப்படி மேனேஜ் பண்ணோம்னு சொல்ல ஆசபடறேன்.

இதெல்லாம் இதே அளவு செய்ய முடியுமான்னு எனக்கு தெரியாது. ஆனா சோர்வா இருக்கு, சலிப்பா இருக்குனு சொல்லி என்னைக்குமே நான் முயற்சி பண்றத நிறுத்த மாட்டேன்.

என் புருசன் ராஜா மாதிரி தான் சாப்பிடுவான் மகாராஜா மாதிரி தான் வாழுவான். Because he is அத்து and my best man ❤

கொஞ்சம் பொய் கொஞ்சும் காதல் - 3


இப்படி இவர ரொம்ப intellectualனு நான் பவ்யமா பேசிட்டு இருக்க, நம்ம ஆளு அதுக்கு மேல பவ்யமோ பவ்யம். அடடடடடே அப்பப்பப்பா தான்..

இப்ப தான் நாங்க நல்லா introduce ஆகிட்டோம்ல.. இரண்டு பேருமே, பவ்யமெல்லாம் விலகி பழகக்கூடியவங்கங்கறதால நல்லா பேசிக்க ஆரம்பிச்சுட்டோம்.

அந்த சமயத்துல நான் பல Ups and downsல குழப்ப மனநிலைல இருந்தேன். இந்த மாதிரி குழப்பமான சமயங்கள்ல பொதுவாவே நாம நிறைய தனிமைய தேர்ந்தெடுப்போம். யார்கிட்டயும் பேசாம நாமளே நிறைய யோசிப்போம். ஏற்கனவே அந்த தவறை செய்திருந்த்தால, கொஞ்சம் உஷாரா யார்கிட்டயாவது பகிர்ந்துக்கலாம்னு முடிவெடுத்திருந்தேன்.

****

நான் பழக ஆரம்பித்ததில் இருந்தே எல்லா விஷயங்களையும் மனோ ரொம்ப மெச்சூர்டா ஹேண்டில் பண்றத கவனிச்சிருந்ததால, என் சம்மந்தமான விஷயங்களில் 3rd person perception வேணும்னு நிறைய விஷயங்கள் பகிர்ந்துக்க தொடங்கி இருந்தேன்.

"மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்"னு பிரச்சனைகளகூட பார்த்து சிரிக்க வச்ச மனுஷன். கஷ்டத்துல கூட இருக்க உறவுகள் கிடைக்கறது வரம்னு சொல்லுவாங்க. ஆமா, அந்த வரத்தையே நான் கல்யாணம் கட்டிருக்கேன் ❤

****

நல்ல நண்பர்கள், புரிதல், ஒற்றுமைங்கறத தாண்டி கொஞ்சம் ஈர்ப்பு ஏற்பட தொடங்கியிருந்தாலும், இரண்டு பேரும் எதுவும் அதபத்தி பேசிக்கல.

****

அப்பறம்???

அடுத்த வாரம் சொல்றேன்...

Friday, 20 December 2019

மாற்றங்கொள்ளா அக்காள்கள்

எப்போதும் அக்காள்கள் கூடவே இருக்கிறான்கள்.
அக்காள்களுக்கு இவன்களைத் தவிர வேறு அரண்களே தேவைப்படுவதில்லை.
கண்ணீரைக் கண்டால் இவன்களுக்கு எங்கிருந்துதான் அந்த பொம்மை வீரம் வருமோ தெரியாது.
கல்யாணம் கட்டிக்கொடுத்துவிட்டு கிண்டலாய் போய் தொலஞ்சியா என்று பல்லைக் காட்டுவான்கள்.
ஓரமாய் போய் கமுக்கமாய் அழுது கொள்வான்கள்.
இந்த அக்காள்களும் சும்மா இல்லை, சந்தோஷமோ அழுகையோ, முதல் வேலையாய் மெசேஜோ காலோ அடித்து தொலைக்கிறாள்கள்.
ஏனோ கல்யாணத்துக்கு பிறகு அவள் மாறி விட்டாள் என எவர் வேண்டுமானாலும் சொல்லலாம்.
அவர்களுக்கெல்லாம் மாற்றத்தைக் காட்டினாலும்,
தம்பிகளுக்கு அதே அக்காள்களாயிருப்பதை அவள்கள் மாற்றிக்கொள்ள விரும்புவதேயில்லை

Friday, 6 December 2019

கொஞ்சம் பொய் கொஞ்சும் காதல் - 2


****

பறவைகளெல்லாம் freeze ஆகறதுக்கு கொஞ்சம் முன்னாடி நடந்த முதல் சந்திப்ப என் கனவுக்குள்ள தேடி பார்ப்போமா 😍

தெரிந்தவர் திருமணம். ஒரு முடிச்சு விழுந்திட்டு இருந்த இடத்தில இன்னொரு முடிச்சுக்கு cupid குட்டி ப்ளான் பண்ணிட்டு இருந்தது. எப்போதும் யாரும் அழைத்தால் முழுதாய் வெளிய வந்து கேட்க சலிப்புபட்டு, கொஞ்சமாய் எட்டி மட்டும் பார்க்கும் சோம்பலான பழக்கம் எனக்கு. ஹீரோயின் ஃபீல் கிடைக்கிறதென்பதால் பழக்கத்தை மாற்றிக்கொள்ள விரும்பவேயில்லை 😬

சரி ப்ரொபைல் பிக்சர்க்கு 4 போட்டோவ தேத்துவோம் மனநிலையோடு என் சிக்னேச்சர் போசில் விதவிதமாய் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஹீரோ சார் என்ட்ரி. ஏற்கெனவே அவரை முகநூலில் தொடர்ந்து கொண்டிந்ததால், ஒரு ஹாய் சொல்லி, formal பேச்சு முடித்தாயிற்று.

****

இந்த பகுதியும், அந்த போட்டோவும் எங்கள் வாழ்வின் மிக முக்கியமான பகுதியாகியது. முதல்ல அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச போட்டோ அதுன்னு சொன்னாங்க.

****

சார் பிறகு எனக்கு முகநூலில் ப்ரெண்டாகி போனார்.

அப்போது #காதல்காரி ஹாஷ்டாகில் சின்ன சின்ன கவிதை எழுதி கொண்டிருந்த எனக்கு, எப்போ எப்படி போஸ்ட் பண்ணனும்னு எல்லாம் ஐடியா கொடுக்க, சிறுத்தை படத்தில் கார்த்தி தமன்னாக்கு தெரிந்த மாதிரி பெத்த உருவமாகி விட்டார் மனசுல.

என்ன ஒரு பெரிய அறிவாளி இவருன்னு பவ்யமாய் நான் பேசிட்டு இருந்தேன். ஆனா எல்லா இடத்துலயும் ஒரு ப்ரேக் பாய்ன்ட் இருக்கும்ல.

அப்படி ஒரு பாய்ன்ட் எங்களுக்குள்ளயும் வந்தது.

எப்போனு அடுத்த வாரம் சொல்றேன் 😌

***தொடரும்***

Thursday, 28 November 2019

கொஞ்சம் பொய் கொஞ்சும் காதல் - 1


*

இந்த உலகத்துல அன்புக்கு ஏங்காத மனுஷன் இருப்பானா? ஆனா எப்பவும் அன்புக்கு ஏங்குற மனுஷங்க நிறைய பேர் இருப்போம். யார்கிட்டயும் காட்டிக்க பிடிக்காம சிரிச்சுகிட்டே நாட்களை முடிஞ்சவரை அழகா ஓட்டிடுவோம். ஆனா உள்ளுக்குள்ள இருக்க வெறுமைய என்ன செய்ய முடியும்? அதை நிரப்ப அன்பு வேணுமே. அதுக்கு மனுஷங்க வேணுமே. நமக்கே நமக்குன்னு ஒரு ஆள், நமக்காகவே யோசிக்கற ஒரு மனுஷன் இருக்கறது எவ்வளவு அழகான விஷயம்.

*

விளங்கிக்கொள்ள முடியாத பல முடிச்சுக்களை காதல் போடும்.. அதில் முதல் முடிச்சு, காதல் தான்.. அந்த முடிச்சு விழுற இடமே தெரியாத அளவு குழப்பங்கள்லயும், கவலைகள்லயும் ஆழ்ந்து போயிருந்தேன். ஆமா, இன்னிக்கு வரை நாங்க தொடங்கின இடம் எங்களுக்கு தெரியல..

*

எல்லாருக்கும் தன்னுடைய துணைய பத்தி நிறைய கனவுகள் இருக்கும். அப்படி நானும் நிறைய யோசிச்சிருந்தேன். வாசிக்க தெரிந்த, அத பத்தி இயல்பா உரையாடத் தெரிந்த, ஓவியங்கள ரசிக்க தெரிந்த, first button போடாத டீசன்ட் guyஆ, மாம்பழ கலர்ல, ஒல்லியா, அழகா பேசற, நிறைய எழுதக்கூடியனு நிறைய கற்பனைகள். ஆனா நிஜமா இப்படி எல்லா எதிர்பார்ப்புகளும் ஃபிட் ஆகுற மனுஷன் இருப்பானா? கஷ்டம் தான். நிஜத்துக்கு பழகனும்னு எதிர்பார்ப்புகள எல்லாம் தள்ளி வைக்க தொடங்கிய காலம் அது. ஒவ்வொரு மனுஷனும் ஒவ்வொரு டிசைன். எந்த ஜாடிக்கு எந்த மூடி பொருந்தும்னு யாராலயும் தெளிவா சொல்லிட முடியாது. அந்தந்த மனுஷனுக்கு மட்டும் தான் அது தெரியும். அதே சமயம் எதிர்ல இருக்கவன் நிஜ முகத்த தான் நம்மகிட்ட காட்றானான்னு நமக்கு தெரியாது. ஏதோ ஒருத்தர்கிட்ட தான் அது நடக்கும். ஏன்னா, என் அம்மா அப்பா கிட்ட கூட என் நிஜ இயல்ப காட்டனும்னு நானே நினைச்சதில்ல.. என்ன முகத்த காட்டுனா என்ன வேலை நடக்கும்னு பெரும்பாலான நேரங்கள்ல HR மோடுலயே தான் இருப்பேன். அதுதான் நான். அதுக்குள்ள இருக்க என்னய கண்டெடுக்கற மனுஷன பார்ப்பேன்னு கனவுல கூட நினைச்சதில்ல..

*

யார் ஒருத்தரோட எல்லா இயல்புகளும் நமக்கு பிடிச்சிருக்கோ, அவங்ககிட்ட கோபிக்க வேண்டிய அவசியமே நமக்கு வராது. ஏன்னா, சில நெகடிவ்களையும் இந்த உலகத்துல நாம விரும்பவோம். பர்ஃபெட்டான மனிதர்கள் இல்லயே நாம. நமக்கு பிடிச்ச மனுஷன்கிட்ட, பாசிட்டிவ் மட்டுமில்லாம நெகடிவ்வும் நமக்கு பிடிச்சதாவே இருந்துட்டா?

சந்திக்கும் போது கடல் அலை, பறவைகள் எல்லா freeze ஆகனும்ல.. எங்களுக்கும் ஆச்சு.. ஆனா சந்திக்கும் முன்னாடியே..

***தொடரும்***

Wednesday, 14 August 2019

ஆதலினால் - எஸ்.ரா



அழகிய கட்டுரைகளின் தொகுப்பு. பொதுவாக நம் மிகச் சுலபமாக கடந்து போகக் கூடிய விஷயங்களை, கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், என்ன செய்வோம்? எப்படி உணர்வோம்? அதை எல்லாம் வார்த்தைகளாக கோத்தால் எப்படி இருக்கும்? அப்படியான கட்டுரைகளின் தொகுப்பே இது.

சில கட்டுரைகளை முன்னமே ஒரு முறை படித்தது நினைவில் இருந்தது. கூர்க்காக்களின் வாழ்க்கையை பற்றி நான் ஒருமுறை கூட சிந்தித்து பார்த்தது கிடையாது என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கூர்க்காக்கள் குடும்பத்துடன் இங்கிருப்பவர்கள் என்றே நினைத்து கடந்து இருக்கிறேன் இதுவரை. ஆனால் இந்த கட்டுரையை படித்து முடிக்கும் போது ஒரு மாதிரி கலங்கினார் போலானது.

எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்டிருப்போம் என்பது உண்மைதான். ஆனால் எத்தனை தூரம் நம்மை சுற்றி உள்ள, நம் வாழ்க்கையை சுலபமாக, அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் மனிதர்களை பற்றி சிந்திக்கிறோம் என்றால் கேள்விக்குறி தான்.

நிறைய நுண்ணுணர்வுகளை நாம் கவனிக்க தவறி இருப்போம். சில சமயம் அதை கவனிக்காமல் கடந்து இருப்போம். அதையெல்லாம் மீண்டும் திரும்பிப் பார்க்க ஆசைப்பட்டாலும், சாதாரண விஷயங்களில் இருந்து நாம் கற்கத் தவறிய, கவனிக்க தவறிய பாடங்களையும், அன்பையும் திரும்பிப்பார்க்க, உணர்ந்துகொள்ள நிச்சயம் இந்த கட்டுரைகள் உதவும்.

எந்தக் கட்டுரையையும் சுட்டிக் காட்டி இதுதான் சிறப்பு என்று சொல்லிவிட முடியாது. அப்படி சொல்ல துவங்கினால், எல்லா கட்டுரைகளையும் எழுதி விட வேண்டியிருக்கும். ஒவ்வொன்றுமே முத்துக்கள் ❤

Saturday, 3 August 2019

தாழிடப்பட்ட கதவுகள் - கரீம்



தாழிடப்பட்ட கதவுகள் - கரீம்

அப்போதுதான் இந்தத் தொகுப்பின் முதல் கதையை வாசித்திருந்தேன். நான் பிறந்து சில ஆண்டுகள் கழித்து கோவையில் குண்டுவெடிப்பு கலவரம் என்று ஒன்று நிகழ்ந்தது என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாத எனக்கு, அது மிகப்பெரிய மனக் கலக்கத்தை உண்டு பண்ணியிருந்தது.

தொடர்ந்து படிக்க முடியாமல் மனோவுக்கு போன் செய்தேன்.

'ரொம்ப கஷ்டமா இருக்கு'

'ஏன்? என்ன ஆச்சு? எதையும் நினைச்சு குழப்பிக்காத, எல்லாம் சரியாயிடும்'

ஒரு மாதிரி ஆறுதலாய் உணரவே, தொடர்ந்தேன்.

'இல்ல, அடுத்த புக்க தொடங்கிட்டேன். முதல் கதையே ஒரு மாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு'

'என்ன புக்?'

'தாழிடப்பட்ட கதவுகள்'

'கரீம் எழுதினது தானே? ரிலாக்ஸா படி, நல்லாருக்கும்'

'ம் bye'

பொதுவா இப்படிப் பேசி கொஞ்ச நேரத்துக்கு நல்லா இருக்கும். ஆனால் அப்போதும் ஏதோ போல் இருக்க, யாரிடமும் பேசாமல் லைட்டை அணைத்துவிட்டு, கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். தொடர்ந்து மீண்டும் சில கதைகள் வாசித்து முடிக்க, பாரம் தாங்க முடியாமல் அழுகை வந்தது.

கோவையில் குண்டு வெடிப்பு நடந்த நாள் தொடங்கி, சாதாரணமாய் வாழ்ந்து வந்த இஸ்லாமியர்களின் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் அது புரட்டிப் போட்டது என்று அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவர் நேரில் பார்த்து சொல்வதைப்போல் தொகுக்கப்பட்டவை. அது நடந்த நாட்கள் மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்குப் பின்பும் அதன் தாக்கம் எவ்வாறு இருந்தது, எவ்வாறெல்லாம் அந்த குடும்பங்களை சில விஷமிகளின் விஷ வேலைகள் சிதைத்தன என்பதையெல்லாம், கொஞ்சமும் அதன் உணர்வு குறையாமல் எழுதப்பட்டிருக்கும் கதைகள்.

எந்த கதையும் நம்மை உலுக்காமல் முடியாது.

இப்படி மதம் பார்த்து பழகும் யாரையும் இப்போது பார்க்க முடிவதில்லையே என்று யோசித்தவாறே அந்த நாட்களை யோசித்தால் அந்த மக்களும் அப்படித்தானே வாழ்ந்திருப்பாங்க, ஒண்ணு மண்ணா பழகியிருப்பாங்கனு தோன்றியது.

கூடவே, Newton's first law நினைவுக்கு வந்தது.

"A body at rest will remain at rest, .... , unless it acted upon by an external force"

அதாவது எந்த விசையும் செலுத்தாது இருக்கும்பட்சத்தில், அசையாத பொருள் அசையாமல் தான் இருந்திருக்கும். அவ்வாறே இந்த கலவரத்தில் அந்த விசை தொடங்கும் இடத்தையும் கதையில் இயல்பாய் அடிக்கோடிட்டு காட்டுகிறார் கரீம்.

கத்தி முனையை காட்டிலும் பேனா முனை கூர்ந்தது என்று படித்திருப்போம் அப்படி ஒரு கூர்மையான புத்தகம் "தாழிடப்பட்ட கதவுகள்".

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb...