தாழிடப்பட்ட கதவுகள் - கரீம்
அப்போதுதான் இந்தத் தொகுப்பின் முதல் கதையை வாசித்திருந்தேன். நான் பிறந்து சில ஆண்டுகள் கழித்து கோவையில் குண்டுவெடிப்பு கலவரம் என்று ஒன்று நிகழ்ந்தது என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாத எனக்கு, அது மிகப்பெரிய மனக் கலக்கத்தை உண்டு பண்ணியிருந்தது.
தொடர்ந்து படிக்க முடியாமல் மனோவுக்கு போன் செய்தேன்.
'ரொம்ப கஷ்டமா இருக்கு'
'ஏன்? என்ன ஆச்சு? எதையும் நினைச்சு குழப்பிக்காத, எல்லாம் சரியாயிடும்'
ஒரு மாதிரி ஆறுதலாய் உணரவே, தொடர்ந்தேன்.
'இல்ல, அடுத்த புக்க தொடங்கிட்டேன். முதல் கதையே ஒரு மாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு'
'என்ன புக்?'
'தாழிடப்பட்ட கதவுகள்'
'கரீம் எழுதினது தானே? ரிலாக்ஸா படி, நல்லாருக்கும்'
'ம் bye'
பொதுவா இப்படிப் பேசி கொஞ்ச நேரத்துக்கு நல்லா இருக்கும். ஆனால் அப்போதும் ஏதோ போல் இருக்க, யாரிடமும் பேசாமல் லைட்டை அணைத்துவிட்டு, கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். தொடர்ந்து மீண்டும் சில கதைகள் வாசித்து முடிக்க, பாரம் தாங்க முடியாமல் அழுகை வந்தது.
கோவையில் குண்டு வெடிப்பு நடந்த நாள் தொடங்கி, சாதாரணமாய் வாழ்ந்து வந்த இஸ்லாமியர்களின் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் அது புரட்டிப் போட்டது என்று அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவர் நேரில் பார்த்து சொல்வதைப்போல் தொகுக்கப்பட்டவை. அது நடந்த நாட்கள் மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்குப் பின்பும் அதன் தாக்கம் எவ்வாறு இருந்தது, எவ்வாறெல்லாம் அந்த குடும்பங்களை சில விஷமிகளின் விஷ வேலைகள் சிதைத்தன என்பதையெல்லாம், கொஞ்சமும் அதன் உணர்வு குறையாமல் எழுதப்பட்டிருக்கும் கதைகள்.
எந்த கதையும் நம்மை உலுக்காமல் முடியாது.
இப்படி மதம் பார்த்து பழகும் யாரையும் இப்போது பார்க்க முடிவதில்லையே என்று யோசித்தவாறே அந்த நாட்களை யோசித்தால் அந்த மக்களும் அப்படித்தானே வாழ்ந்திருப்பாங்க, ஒண்ணு மண்ணா பழகியிருப்பாங்கனு தோன்றியது.
கூடவே, Newton's first law நினைவுக்கு வந்தது.
"A body at rest will remain at rest, .... , unless it acted upon by an external force"
அதாவது எந்த விசையும் செலுத்தாது இருக்கும்பட்சத்தில், அசையாத பொருள் அசையாமல் தான் இருந்திருக்கும். அவ்வாறே இந்த கலவரத்தில் அந்த விசை தொடங்கும் இடத்தையும் கதையில் இயல்பாய் அடிக்கோடிட்டு காட்டுகிறார் கரீம்.
கத்தி முனையை காட்டிலும் பேனா முனை கூர்ந்தது என்று படித்திருப்போம் அப்படி ஒரு கூர்மையான புத்தகம் "தாழிடப்பட்ட கதவுகள்".
நியூட்டன் விதியை அழகாக இணைத்ததை ரசித்தேன். சுருக்கமான அழகான பதிவு
ReplyDelete☺☺☺
Deleteசுருக்கமான அழகான சிறப்பான விமர்சனம்.
ReplyDeleteநன்றி
Delete