அழகிய கட்டுரைகளின் தொகுப்பு. பொதுவாக நம் மிகச் சுலபமாக கடந்து போகக் கூடிய விஷயங்களை, கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், என்ன செய்வோம்? எப்படி உணர்வோம்? அதை எல்லாம் வார்த்தைகளாக கோத்தால் எப்படி இருக்கும்? அப்படியான கட்டுரைகளின் தொகுப்பே இது.
சில கட்டுரைகளை முன்னமே ஒரு முறை படித்தது நினைவில் இருந்தது. கூர்க்காக்களின் வாழ்க்கையை பற்றி நான் ஒருமுறை கூட சிந்தித்து பார்த்தது கிடையாது என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கூர்க்காக்கள் குடும்பத்துடன் இங்கிருப்பவர்கள் என்றே நினைத்து கடந்து இருக்கிறேன் இதுவரை. ஆனால் இந்த கட்டுரையை படித்து முடிக்கும் போது ஒரு மாதிரி கலங்கினார் போலானது.
எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்டிருப்போம் என்பது உண்மைதான். ஆனால் எத்தனை தூரம் நம்மை சுற்றி உள்ள, நம் வாழ்க்கையை சுலபமாக, அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் மனிதர்களை பற்றி சிந்திக்கிறோம் என்றால் கேள்விக்குறி தான்.
நிறைய நுண்ணுணர்வுகளை நாம் கவனிக்க தவறி இருப்போம். சில சமயம் அதை கவனிக்காமல் கடந்து இருப்போம். அதையெல்லாம் மீண்டும் திரும்பிப் பார்க்க ஆசைப்பட்டாலும், சாதாரண விஷயங்களில் இருந்து நாம் கற்கத் தவறிய, கவனிக்க தவறிய பாடங்களையும், அன்பையும் திரும்பிப்பார்க்க, உணர்ந்துகொள்ள நிச்சயம் இந்த கட்டுரைகள் உதவும்.
எந்தக் கட்டுரையையும் சுட்டிக் காட்டி இதுதான் சிறப்பு என்று சொல்லிவிட முடியாது. அப்படி சொல்ல துவங்கினால், எல்லா கட்டுரைகளையும் எழுதி விட வேண்டியிருக்கும். ஒவ்வொன்றுமே முத்துக்கள் ❤
No comments:
Post a Comment