Saturday 29 June 2019

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்



மனதில் நின்றவர்கள் என்றால், ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு, அக்கம்மாள்  எனஎல்லாரும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள் தான். எவ்வளவு நல்லவங்களா இருக்காங்கல்லனு நினைக்க தோணுது.  ஒவ்வொருவரைப் பற்றியும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய கதாபாத்திரமான ஹென்றி. அவன் மிகவும் நேசிக்கும் அவனது அப்பா சபாபதி பிள்ளையின் வாழ்க்கை, அந்த ஊர், இதெல்லாம் ஹென்றியின் மேல் கொண்ட தாக்கம் என அழகான பின்னலாய் விரியும் கதை. சபாபதியின் மனைவி வேறொருவனை விரும்பி அவனுடன் சென்று விட, குடும்பத்தின் மானம் காக்கும் பொருட்டு ஊரைவிட்டு வெளியேறி இராணுவத்தில் சேர்ந்து விடுகிறார். அதாவது கணவனும், மனைவியும் சேர்ந்து பரதேசம் போனது போல். அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற காரணம் அவ்வாறு நினைப்பதற்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது.

அங்கு மைக்கேல் நண்பனாய் கிடைக்கிறார். போரில் மைக்கேல் தாக்கப்பட, இறக்கும் தருவாயில் நண்பனான சபாபதி பிள்ளையிடம் தன் மனைவியை பார்த்துகொள்ள சொல்லிவிட்டு இறக்கிறார் மைக்கேல். அந்த அசாதாரண சூழ்நிலையில் இரயிலில் யாருமற்ற குழந்தையாய் ஹென்றி அழுது கிடக்க தங்களுடன் எடுத்துச் சென்று விடுகின்றனர் இந்த தம்பதியினர்.

 தகப்பனும் தாயும் மட்டுமே சூழ வாழ்ந்த இந்த ஏதுமறியா வெள்ளந்தி குழந்தை ஹென்றியின் மீது எதையும் திணிக்காமல் பச்ச மனசோடயே வளர்க்கிறார்.. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு துறவியின் பக்குவம்.. தகப்பனும் தாயும் தவறிய பின், தகப்பன் விவரித்த அவர் ஊருக்கு சென்று, பாழடைந்து போயிருந்த அவரின் வீட்டை அச்சில் வார்த்தார்போல் புதுப்பிக்கிறார்..

இயல்பான தன்மையால் அவனை சுற்றிலும் அன்பான மனிதர்களையும் சேர்த்துக் கொள்கிறார். இதற்கிடையில் புத்தி சுவாதீனமில்லாத ஒரு பெண்ணின் பகுதியும் சேர்கிறது. இந்த புத்தகத்தை ஜெயகாந்தன் எழுதிய இது எழுதியதைப் பற்றி வாசிக்கும் போது அவர் இதை எழுதிக் கொண்டே இருக்க விரும்புவதாகவும், எப்போது முடிக்கப்படும் என்று கேள்வி கேட்கப்பட்ட அடுத்த வாரம் இந்த தொடரை முடித்துவிட்டதாகவும் ஓரிடத்தில் கூறியிருக்கிறார். ஒருவேளை அந்தப் பெண்ணை பற்றி இன்னும் விவரிக்க அவர் எண்ணியிருக்கலாம்.

வீட்டிற்கு மின்சார வசதி பெறலாம் என்று தேவராஜன் கூறும்போது, அகல் விளக்கின் ஒளி போதும் என்று அவன் கூறுகையில் ஹென்றியின் சொல்லபடாத அமைதி உணர்வு நமக்கும் கடத்தப்படுகிறது. அவனுக்குள் இருக்கும் இயல்பான தன்மையும் எந்த திணிப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் அதேசமயம் யாரையும் வருந்த வைக்காமல் இருக்கும் அவன் இயல்பு எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. வளைந்து கொடுக்கும்படியாக இருப்பதே தனது கொள்கை என்று அவன் கூறுவது யோசித்துப் பார்க்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. முழுமையாக ஒருநாள் அப்படி கடத்தமுடியுமா என்றால், இப்போதிருக்கும் மனநிலைக்கு கஷ்டம்தான். ஹென்றியை எல்லோருக்கும் பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது அந்த கொள்கை என்றும் கூறலாம். எல்லோரும் நிச்சயம் ஒருமுறையாவது படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.

2 comments:

  1. Neengal intha pathivai eluthiya piragu. Oru nalavathu intha kathai padika vendum endra aravum thondrivitathu. Nandri

    ReplyDelete
    Replies
    1. 😍🔥 நன்றிங்க.. நல்லாயிருக்கும். கண்டிப்பா படிங்க..

      Delete

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...