கன்னித்தீவு - ஓர் ஆதித் தெறிப்பு!

ரைட்டர் Saravanakarthikeyan Chinnaduraiயிடம் ஸ்பெஷலாக கையெழுத்திட்டு வாங்கிய இந்தப் புத்தகம் கை சேரும் முன்பே sapiens படிக்கத் தொடங்கி இருந்ததால், parallel readingஇல் 'கன்னித்தீவு' தொடங்கி, ஓர் அத்தியாயம் படித்து முடித்தேன். கிண்டிலில் sapiens கிட்டதட்ட 30% முடித்திருந்த வேளையில், இதைவிட கன்னித்தீவு முதல் அத்தியாயம் கொஞ்சம் அதிக சுவாரஸ்யமாக இருந்ததே என தினமும் மனசு சொல்லிக்கொண்டே இருந்தது. இடையில் போட்டி அறிவிப்பு வந்தும் கூட தொடங்க ஒரு motivation வராமலே இருந்தது. ஆனால் அந்த முதல் அத்தியாயம் என்னை விட்ட பாடில்லை. ஒரு வழியாக, சரி parallel reading எல்லாம் வேண்டாம், முதலில் கன்னித்தீவை முடிப்போம் எனப் படிக்கத் தொடங்கினேன்.

ஒரு காதல் மணம் புரிந்த பெண் ஒருத்தி, பழங்குடிகள் இடத்தில் மாட்டிக்கொண்ட பின் நடக்கும் கதை. மானுடவியல் பார்வையில் நிறைய விஷயங்கள் கலந்து செய்த கலவையான கதை.

கர்ப்பகால பரிசோதனை எனத் தொடங்கி அதைத் தொடர்ந்து ஒரு ஃப்ளாஷ்பேக். நாயகி நாயகன் திருமணம். ஏற்கெனவே இவ்வாறொரு திருமணத்தை நேரில் கண்ட அனுபவம் உண்டு என்பதால், நிறைய விஷயங்கள் பொருத்திப் பார்க்க முடிந்தது. பல விஷயங்கள் நிஜத்தில் நடந்தவையோடு அட்சர சுத்தமாக பொருந்தின.

அவனிடம் பழகும் பெண்கள் அவனைக் காதலிக்காமல் இருக்க முடியாது என்பது கொஞ்சம் மிகையாகவே இருந்தது. கவிதைக்கு அழகே மிகைப்படுத்தல்தானே! பையன் கேரக்டர் ஒரு வகையில் இங்கு கவிதை போலத்தான் இருந்தது. அதனால் ஓக்கே.

அதே போல, அந்தப் பெண்ணுக்கு அத்தனை தைரியமா? ஆனால் கொஞ்சம் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டு காலை ஒடித்துக் கொண்டவரின் கதை எனக்கு நெருங்கிய வட்டத்திலேயே உண்டு என்பதால் அதைக் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனாலும், கர்ப்ப காலம், கப்பல் பயணம், பழங்குடி இடம் என எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் படிக்கும் நமக்கே 'பக்'கென்று இருக்கும்.

நாயகி பார்வதி கடல் வழியே அந்தப் பழங்குடி இடத்திற்கு செல்லும்போது,

"கடலின் உயிர்ப்பே இதில் தென்படவில்லை. அலைகள் இல்லாமல் என்ன கடல்!" என சலித்துக்கொள்கிறாள்.

கூட வரும் ரஸூல்,

"நடுக்கடலில் இது நமக்குக் காட்டுவது தனது உயிர்ப்பை. குறும்புத்தனத்தை அல்ல; தன் பிரமாண்டத்தை, பெரும்பலத்தை. இது வேறு முகம்" என்று கூறுகிறார்.

அத்தனை ஆத்மார்த்தமாக இந்த வரிகளுடன் மனம் ஒன்றிப்போனது. நடுக்கடலை பார்க்கும் ஆசை உண்டென்றாலும் இன்னும் பார்க்க வாய்க்கவில்லை. ஒருவேளை கடலை பார்த்திருந்தால் இப்படித்தான் மனவோட்டம் இருந்திருக்கும் போலிருக்கிறது.

பின்பொரு முறை பார்வதி நினைக்கிறாள்,

"ஒரு நகைச்சுவை கூட யார் சொல்கிறார் என்பதில்தான் வருவது புன்னகையா, எரிச்சலா என தீர்மானிக்கிறது."

இது எவ்வளவு நிஜமான வார்த்தைகள். சில சமயத்தில் இது பற்றிய குற்றவுணர்வு மனதில் உழலும். ஆனால், இதைப் படிக்கும்போது நிஜமாகவே ஒரு தெளிவு ஏற்பட்டது. நகைச்சுவை நம்பிக்கையான ஒருவர் சொல்லும் போதும், முன்பின் அறிமுகமில்லாதவர் அதைச் சொல்லும் போதும், நாம் நம்பாத ஒருவர் அதை சொல்லும்போதும் வேறு வேறு உணர்வு ஏற்படுவது சகஜம் தானே. நமது protective intuition அவ்வாறு நடந்துகொள்ளச் செய்வதில் என்ன தவறு இருக்கிறது. எடுத்தவுடன் உரிமை எடுத்துக்கொள்பவன் மீது நம்பிக்கை எப்படித் துளிர்க்கும்? இந்த விஷயத்தில் இந்தப் புத்தகம் எனக்கு ஒரு eye opener.

அவனுக்கு அப்படி ஒரு முடிவு ஏற்பட்டது, ஒரு வகையில் மனதின் வன்மத்திற்கு தீனி போடுவதாகவே இருந்தது. மற்றபடி, நிக்கியை போன்ற அபத்தங்கள் உலகெங்கும் தென்படக்கூடிய ஜந்துக்களே.

அடுத்தாக, அந்தப் பழங்குடிகளிடம் பார்வதி பழகுவது. முதல் ஆபத்தில் குழந்தை மூலமாகத் தப்பித்த பின், மொழி தெரியாத இடத்தில் எப்படியெல்லாம் உழல்வோம், கவனிக்கப்படாத இடத்தில் எந்த அளவுக்கு தவறு என்று எண்ணப்படும் விஷயங்களைச் செய்ய மனம் ஒப்புக்கொள்ளும், எங்கு எதிர்க்கும், மனதின் விசித்திரங்கள் எல்லாம் கோக்கப்பட்டது அருமை.

"எந்த இயற்கை சங்கதியும் மனிதர்களை அஞ்சுகிறது. அவனது வரலாறு அப்படி!"

இந்த வரிகள் ஆரம்பத்தில் படித்த sapiens புத்தகத்தை நினைவுக்கு இழுத்துவிட்டது. எப்படிப் பார்த்தாலும் ஆமாம் தானே! அப்படியான மோசமான நிலைமையை உண்டாக்குபவர்கள் தான் நாம். சுனாமிக்குத் தப்பிக்க ஒரு பெரிய மரத்தை நோக்கி பழங்குடிகளுடன் ஓடும் பார்வதி, மரத்தைப் பார்த்தவுடன், "இதை வெட்டி வீழ்த்தினால் ஒரு ஜமீன் பங்களாவுக்கு தேவையானதை அருளும்" என்று நினைக்கிறாள், பின்பு எல்லாமே தீப்பற்றி எரிந்து போவதை கற்பனை செய்து பார்க்கிறாள்.

நிஜத்தில் இப்படியான அபத்த கற்பனை நிறைந்தவர்கள் தானே நாம்? இங்கே யாருமே இல்லை என்று சொல்லி விட முடியாத அளவு, பற்பல தருணங்களில், பல விதமான வித்தியாசமான, அபத்தமான, நினைக்க விரும்பா சிந்தனைகளுடன் உலவுபவர்கள் தானே நாம். ஆனால், எத்தனை சீக்கிரம் வெளியே வந்து நிஜத்துடன் ஒன்றிக் கொள்கிறோமோ, அத்தனை தூரம் பைத்தியமாவதிலிருந்து தப்பித்துக் கொள்கிறோம்.

நிக்கியின் தவறான பார்வை குறித்து ரசூல் நிக்கியிடம் எதுவுமே கேட்காமல் இருப்பது மோசமாகத் தோன்றினாலும், இங்கு நிஜம் அது தான். கோழையாக அல்லது நமக்கு என்ன என்று நகர்ந்து போவதே பெரும்பாலனவர்கள் செய்யக்கூடியது. அவள் படகில் தூங்கும்போது துப்பட்டாவை கொண்டு மூடியது போல், தங்கள் வட்டத்திற்கு பிரச்னை வராதவாறே உதவிகள் செய்வார்கள். மிகச்சில தருணங்களில் தட்டிக்கேட்டவர்களின் முகமும், நீ தூரமா இருந்துக்கோ, அவன் மூஞ்சிலயே முழிக்காத போன்ற அறிவுரைகளும் கண்முன் வந்து சென்றன. :)

இந்த கதையில் பல விஷயங்கள் கதையாகத் தோன்றாமல், நிஜம் போலவே தோன்றக் காரணம் அந்த இடங்களைப் பற்றிய அறிவும், அம்மாதிரியான மனிதராக இருப்பதோ அல்லது அம்மாதிரியான மனிதர்களோடு பழகியிருப்பதோ தான் காரணம் என்று கூறுமளவிற்கு நம்பகத்தன்மை ஏற்படுத்தக்கூடியது.

மரியா. என்னதான் யாருக்கு யார் வேண்டுமானாலும் சொந்தம் என்ற சமூகத்தில் பிறந்தாலும், எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதாவது, பெரும்பாலானோர் இங்கு தாலி கட்டி பெண்ணை சொந்தமாக்கிக் கொள்வதை ஆதரித்தாலும். Open relationship, dating ஆகியவற்றை ஆதரிப்போரும் இருக்கிறோம் அல்லவா? Spur of the momentல் செய்ததாய் தோன்றிய கொலை. ஒரே வேளை சின்ன இடைவெளி கிடைத்திருந்தாலும் கையில் காலில் விழுந்து மன்னிப்பு பெற்றிருக்கக்கூடும்.

கதை முடிவு, பார்வதியும் குழந்தையும் காய்ச்சலுக்கு தப்பியதும், மரியாவும் அவள் குழந்தையும் இறந்ததும் அறிவியலின் வளர்ச்சியை சொல்லும் விதமாக இருந்தது அருமை.

கதாபாத்திரங்கள் மூலம் நிறைய விஷயங்கள் கூறியிருக்கிறார். கலப்புத் திருமணம், பார்ப்பனியம், அரசியல், உணவு, மருத்துவம் எனப் பல்வேறு விஷயங்கள். தகவல்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும், எதுவும் துருத்திக்கொண்டிருப்பதாய் தோன்றவில்லை.

ஒரு வகை easy learning. தகவல்களைப் பொருத்தவரை நிறைய தேடியிருப்பதற்கான உழைப்பு நன்றாகத் தெரியும்.

மற்றபடி, நிஜமாகவே ஒரு படம் பார்த்த உணர்வு இருக்கும். ப்ரேக் எதுவும் விடாமல், 'ஒரே மூச்சில்' படித்து முடித்து விடக்கூடும்.

புத்தகம் முழுக்க அவ்வளவு காதல். ஒருவர் அவ்வளவு காதல் வயப்பட்ட பின், அந்தக் காதலைப் பற்றி நொடிக்கொரு முறை நினைக்கவே தோன்றும். அப்படி அவள் ஓராயிரம் முறை முருகனை நினைக்கிறாள். எல்லா இடங்களிலும் அவனைப் பற்றிய நினைவைக் கொண்டோ அல்லது அவனைப் போல யோசித்தோ, அவன் இடத்தை நிரப்பியே வைத்திருக்கிறாள். காதல் ❤️

கதையோடு இயல்பாக இல்லாமல் எனக்குத் தோன்றிய விஷயங்கள்,

1. பார்வதிக்கு அவ்வளவு பக்கத்தில் due date இருந்தும் அவ்வளவு தூரத்தில் அரசு சம்மந்தமான வேலைக்கு அனுப்பப்பட்டது
2. எல்லாப் பிரச்னைகளிலும் அவள் மட்டும் தப்பித்தது. (ஆனால் அது இல்லையென்றால் கதையே இல்லை இல்லயா?)
3. பார்வதி திரும்பிய காட்சி. தொங்கி சாகசம் செய்து ஹெலிகாப்டரில் ஏறியது.

மொத்தத்தில் நல்ல நாவல். Worth the time. நிச்சயம் படிக்கலாம்.

Comments

Popular posts from this blog

கரன் கார்க்கியின் ஒற்றைப்பல்

கொஞ்சம் பொய் கொஞ்சும் காதல் - 1