Sunday 30 June 2019

பாவத்தின் பார்வை


பாவமென்று அறிந்த பின்னும் சலனமற்று நின்றிருந்தாள்..
அத்தை, மாமன், சித்தி என உற்றாரின் ஏச்சுகளை எல்லாம் கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தாள்..
அப்பன் அவளை அடிக்கக்கூட செய்தான்..
அழுத்தமாய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாய்..
ஏச்சுக்களை எல்லாம் கனவிலே தொலைத்துக் கொண்டிருந்தாள்..
அப்பன் அடித்தானே, வலியே இல்லை என்று எண்ணிக்கொண்டே தன்னை தொட்டு பார்த்துக்கொண்டாள்..
ஏனோ அந்த வெறித்த பார்வை மட்டும் இரவெல்லம் அவளை தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது..

#காதல்காரி 

Saturday 29 June 2019

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்



மனதில் நின்றவர்கள் என்றால், ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு, அக்கம்மாள்  எனஎல்லாரும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள் தான். எவ்வளவு நல்லவங்களா இருக்காங்கல்லனு நினைக்க தோணுது.  ஒவ்வொருவரைப் பற்றியும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய கதாபாத்திரமான ஹென்றி. அவன் மிகவும் நேசிக்கும் அவனது அப்பா சபாபதி பிள்ளையின் வாழ்க்கை, அந்த ஊர், இதெல்லாம் ஹென்றியின் மேல் கொண்ட தாக்கம் என அழகான பின்னலாய் விரியும் கதை. சபாபதியின் மனைவி வேறொருவனை விரும்பி அவனுடன் சென்று விட, குடும்பத்தின் மானம் காக்கும் பொருட்டு ஊரைவிட்டு வெளியேறி இராணுவத்தில் சேர்ந்து விடுகிறார். அதாவது கணவனும், மனைவியும் சேர்ந்து பரதேசம் போனது போல். அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற காரணம் அவ்வாறு நினைப்பதற்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது.

அங்கு மைக்கேல் நண்பனாய் கிடைக்கிறார். போரில் மைக்கேல் தாக்கப்பட, இறக்கும் தருவாயில் நண்பனான சபாபதி பிள்ளையிடம் தன் மனைவியை பார்த்துகொள்ள சொல்லிவிட்டு இறக்கிறார் மைக்கேல். அந்த அசாதாரண சூழ்நிலையில் இரயிலில் யாருமற்ற குழந்தையாய் ஹென்றி அழுது கிடக்க தங்களுடன் எடுத்துச் சென்று விடுகின்றனர் இந்த தம்பதியினர்.

 தகப்பனும் தாயும் மட்டுமே சூழ வாழ்ந்த இந்த ஏதுமறியா வெள்ளந்தி குழந்தை ஹென்றியின் மீது எதையும் திணிக்காமல் பச்ச மனசோடயே வளர்க்கிறார்.. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு துறவியின் பக்குவம்.. தகப்பனும் தாயும் தவறிய பின், தகப்பன் விவரித்த அவர் ஊருக்கு சென்று, பாழடைந்து போயிருந்த அவரின் வீட்டை அச்சில் வார்த்தார்போல் புதுப்பிக்கிறார்..

இயல்பான தன்மையால் அவனை சுற்றிலும் அன்பான மனிதர்களையும் சேர்த்துக் கொள்கிறார். இதற்கிடையில் புத்தி சுவாதீனமில்லாத ஒரு பெண்ணின் பகுதியும் சேர்கிறது. இந்த புத்தகத்தை ஜெயகாந்தன் எழுதிய இது எழுதியதைப் பற்றி வாசிக்கும் போது அவர் இதை எழுதிக் கொண்டே இருக்க விரும்புவதாகவும், எப்போது முடிக்கப்படும் என்று கேள்வி கேட்கப்பட்ட அடுத்த வாரம் இந்த தொடரை முடித்துவிட்டதாகவும் ஓரிடத்தில் கூறியிருக்கிறார். ஒருவேளை அந்தப் பெண்ணை பற்றி இன்னும் விவரிக்க அவர் எண்ணியிருக்கலாம்.

வீட்டிற்கு மின்சார வசதி பெறலாம் என்று தேவராஜன் கூறும்போது, அகல் விளக்கின் ஒளி போதும் என்று அவன் கூறுகையில் ஹென்றியின் சொல்லபடாத அமைதி உணர்வு நமக்கும் கடத்தப்படுகிறது. அவனுக்குள் இருக்கும் இயல்பான தன்மையும் எந்த திணிப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் அதேசமயம் யாரையும் வருந்த வைக்காமல் இருக்கும் அவன் இயல்பு எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. வளைந்து கொடுக்கும்படியாக இருப்பதே தனது கொள்கை என்று அவன் கூறுவது யோசித்துப் பார்க்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. முழுமையாக ஒருநாள் அப்படி கடத்தமுடியுமா என்றால், இப்போதிருக்கும் மனநிலைக்கு கஷ்டம்தான். ஹென்றியை எல்லோருக்கும் பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது அந்த கொள்கை என்றும் கூறலாம். எல்லோரும் நிச்சயம் ஒருமுறையாவது படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.

Friday 28 June 2019

Parallel Reading


எப்பவும் ஒரே விஷயத்துல மூழ்கி முத்தெடுப்பது எனக்கு சின்ன வயசுல இருந்தே வரல.. அதனாலயே multi tasking எனக்கு பிடித்தமான & நல்லா வரக்கூடிய விஷயமும் கூட.. இந்த parallel readingம் அப்படிதான் பாக்கறேன்..
ஒரு சமயத்தில் 2-3 புத்தகங்கள் வாசிப்பது நிறைய வசதிகள் கொண்டது. புத்தகம் சுமக்க முடியாத நேரத்தில் போனில் உள்ள புத்தங்களையும், வீட்டில் வேறு புத்தகமும் படிக்கலாம்.. மனநிலைக்கு ஏற்றாற்போலும்.. ❤
ஒரு சமயம் ஒரு புத்தகத்தில் நமக்கு ஏதோவொரு காரணமாக தொய்வு ஏற்பட்டாலும், பெரிய இடைவெளி எதுவும் இல்லாமல் சட்டென்று mood recover பண்ணிக்கலாம்.. அதே சமயம் நிறையவும் படிக்கலாம்.
சில சமயம் அந்த புத்தங்களுக்கிடையில் நாமே ஒரு பின்னல் ஏற்படுத்திக்கொண்டு புது சிந்தனைகள், ஐடியாக்களை கூட உருவாக்குவோம்.. நல்லாயிருக்கும் 😍

Thursday 27 June 2019

கனவுக்காதலன்



அவனெனும் போதே ஒட்டிக் கொள்ளும் நாணம்,
அவனை எண்ணும் போது அவளை மீறிப் போகும்..
கனவினில் தினம் சந்திக்கும் அவனை, விழிகாண ஏக்கங்கொண்டு கனவுகள் தேய, குரல் கம்ம, உடல் இளைக்க அழுது தவிப்பாள்..
பிறையென்று தேய்ந்த பின்னும், பிறிதொருநாள் முழு நிலவாய் மின்னும் நிலவைப் போல, அவன் நினைவொன்றில் மூழ்கத் தொடங்குகையிலே பிரகாசிக்கிறாள்,
நிஜமற்று வாழும் காதற் பேழையானவள்..

#கனவுக்காதலன் #காதல்காரி

Saturday 22 June 2019

Kayamkulam Kochunni



மலையாள படம், கொஞ்சம் தானாவே புரியறதும், கொஞ்சம் சப்டைட்டில் உதவியுமாக பாத்தாச்சு.. பசிக்கு திருடும் ஒருவரின் மகனாகப் பிறந்து, அம்மாவால் "வெளிய போயி பொழச்சுக்கடா கண்ணு" என்று அனுப்பி வைக்கப்படுகிறார். ஒரு நல்லவரின் இடத்தில் சேர்ந்து, கடை ஒன்றில் வேலை செய்யத் துவங்குகிறார். திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது என்று கொள்கையுடன் வளர்கிறார். பசட்டென துளிர்விடும் காதல், காதலி உதவியினால் முன்பு நிராகரிக்கப்பட்ட களரி பயிற்சி கிட்டுகிறது. குரு இவனையே தன் கலை மகன் எனக் கூறுகையில், பல வருடமாக கலையை காதலித்த வருங்கால போலிஸ்காரன் கோபித்துக் கொண்டு மூட்டை கட்டிக் கிளம்புகிறான்.
பின்பொருநாள், ஆங்கிலேயர்களுக்கு தெரியாமல், தங்கத்தை எடுக்க முயற்சிக்கும் ஐயர் கூட்டத்தால், கடலுக்குள் இருந்து தங்கத்தை எடுத்துவர அனுப்பி வைக்கப்படுகிறார். அவர்களே 5 பொன் பரிசளித்துவிட்டு திருடன் பட்டமும் கட்டிவிட்டு, அவர் காதலி தாழ்ந்த சாதி என்பதால் அவளையும் கல்லால் அடித்து விரட்டுகிறார்கள். தண்டனையாக இவனை தலைகீழாய் தொங்க விட்டுவிட, இட்டிகரை பக்கி என்ற பெரிய திருடன் (மோகன்லால்) வந்து காப்பாற்றி, இவனை அந்த இடத்திற்க்கே ஒரு அதிபதி போல நிலைநாட்டி விட்டு அவ்விடத்தை விட்டு பிரிகிறார்.
இவன் காதலி என்பதால் பல இடங்களிலும் துன்பப்பட்டவள், காவலர்களிடம் இவனை காட்டிக் கொடுத்துவிடுகிறாள். அங்கு தப்பியபின், இவன் கூட்டாளிகள் காவல்காரரால் வஞ்சிக்கப்பட்டு, காட்டிக்கொடுக்கப்படுகிறான். தூக்கிடலப்படும் தருணம் தன் குருவால் காக்கப்படுகிறான்.
அந்த காலத்தில் இருந்த பிரிவினை, அடக்குமுறை எல்லாம் தெளிவாக படம் பிடித்திருக்கிறார்கள். இப்போது நாம் கொண்டாடும் சுதந்திரம், அதை எப்படியெல்லாம் வாங்கியிருக்க முடியும் என்பதெல்லாம் அவ்வப்போது கண்முன் நிழலாடுகிறது.
இது ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்த, காயங்குளம் கொச்சுன்னி எனும் நிஜமான ஒருவரின் கதை. இருப்பவரிடம் எடுத்து, இல்லாதவரிடம் கொடுக்கும் கொள்கையுடன் வாழ்ந்தவர். இவர் இறப்பு ஒரு மர்மமாகவே இருக்கிறது.

Tuesday 18 June 2019

கரன் கார்க்கியின் ஒற்றைப்பல்




கதை அருமை..
ஒரு கிழவன், அவன் வாழ்க்கையை சுற்றி பின்னபட்ட கதை.. ஒவ்வொருவருடைய பார்வையும், நியாயங்களும், அவர்களுடைய வசனங்களில் சுத்தமாய் வந்து விழுந்திருக்கிறது..
ஆனால் இடையிடயே வரும் "அது போல் இது, இது போல் அது" டெம்ளேட் கொண்ட வசனங்கள், கதையிலிருந்து என்னை வெளியே தள்ளி விட்டது போன்ற உணர்வு.. ஆனால் கதையின் ஆர்வம் உள்ளிழுக்கும்.
பெண்ணின் பார்வை என்றால், முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அவரது மருமகள் தொடங்கி, அவரது மனைவி, குஷ்பு, குஷ்புவின் அம்மா, சாவித்திரி அக்கா, சேட்டம்மா என எல்லாரையும் உணர முடிந்தது. கிழவனின் மரணத்திற்கு குஷ்பு மட்டுமல்லாது, நமக்கு அழுகை வரும். தகப்பனை பார்த்திராத அந்த பெண் கிழவன் மேல் செலுத்தும் பாசம் மனசுக்கு நெருக்கமானது.
சேட்டம்மா போன்ற நிறைய பேர பார்த்திருப்போம். புரிதலின் ராணிகள். மனதிலிருந்து உதவுபவர்கள். எல்லார் வீட்டிற்க்கு பக்கத்திலும், அந்த இடத்தோடு ஒன்றிய ஒரு சாவித்திரி அக்கா இருப்பாள் 
சாரதா, கிழவரின் மனைவி. கதை தொடக்கம் முதல் முடிவு வரை, அந்த ஒற்றைப் பெயர் தான் அவர் அதிகம் கூறியது. கொஞ்சம் ப்ளாஷ்போக் போயி இவங்க திருமணம், அதன் பின்னான அவர்களது வாழ்க்கை எல்லாம் பார்க்கும் போது, மனநலம் கொஞ்சம் பிறழ்ந்த கோயில்தாசான இந்த கிழவரும், சாரதாவும் சேர்ந்த கதை புரிகிறது.
தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் ஆண்கள் மீது பயமேற்பட, தனக்கான துணையாக, கோயில்தாஸ் எனும் இந்த கிழவனை தன் கணவனாக ஏற்றுக்கொள்ளகிறாள். ஆனால் இவனை கட்டிக்கொண்டதை பற்றி அழியாத குறை அவள் மனசிலுண்டு. எப்போதாவது ஒரு முறை அதை நினைத்தும் கொள்கிறாள்.
இப்படி குழந்தை போல சொல்வதையெல்லாம் கேட்டு, தனக்காக எதுவும் செய்த இவனை எப்படி பிடிக்காமல் போகும். ஆனால், எல்லா நேரங்களிலும் அவள் மட்டுமே சிந்திக்கக் கூடியவளாக இருந்தது, ஒவ்வொரு சமயம் நிச்சயம் சலிப்பை ஏற்படுத்தக்கூடியதே.
கிழவனின் மரணத்தின் போது, கடவுளைச் சேர்ந்தவர்கள், அவரைத் தொழுது அதை கடந்து கொண்டிருப்பதும், சில நாட்களே அன்பு செலுத்தி பழகியிருந்த குஷ்பு அடக்கமுடியாமல் அழுது கொண்டிருந்ததும், அந்த காட்சியின் விவரிப்பும், கவனமற்ற வேளையில் ஒரேயடியாய் மனதில் துக்கத்தை ஏற்றிவிட்டாற்போல் இருந்தது

- Sowmi
.

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...