Thursday, 18 February 2021

ZZ செடி முளைச்சிடுச்சு

சில மாதங்களுக்கு முன்னாடி zz plantடோட ஒரு கிளைய, லவ் பேர்ட்ஸ் விளையாடும்போது ஒடைச்சு விட்ருச்சு. அத எடுத்து தனியா நட்டு வச்சிருந்தேன்.

என்னடா இது ரொம்ப மாசமா ஒரு மாற்றமும் இல்லயே. சின்ன தொட்டிக்கு மாத்திடுவோம்னு இன்னிக்கு எடுத்தா, கீழ அதோட கிழங்கு முளைச்சிருக்கு 😍😍

பாக்கவே அவ்ளோ சந்தோஷம். லவ் பேர்ட்ஸ் முட்டை பொரிக்கும்போதும் இப்படித் தான் இருக்கும். மனசெல்லாம் ஜில்லுனு, ஒரு மாதிரி சந்தோஷமா, வாவ்னு..

Gardening எல்லாருக்கும் எப்படினு தெர்ல. ஆனா எனக்கு பேரானந்தம். ஒவ்வொரு இலை முளைக்கும்போதும் இப்படி சந்தோஷம் வரும். ஒவ்வொரு செடியும் எனக்கு ஒரு source of happiness 

Monday, 9 November 2020

சின்ன பொம்மைகளும் சின்னஞ்சிறு குழந்தைகளும்!

 


பொதுவாக விளையாடுவது என்றாலே மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் ஒவ்வொரு விளையாட்டிலும் நன்மை தீமைகள் உண்டு. சண்டை அதிகமிருக்கும் வீடியோ கேம்கள் குழந்தைகளிடம் வன்முறை எண்ணத்தை வளர்க்கிறது போன்ற செய்திகளை கடந்து வந்திருப்போம். சிறிய அளவுள்ள பொம்மைகளை வைத்து விளையாடுவதில் நன்மை உண்டா, இல்லை ஏதேனும் தீமைகள் உண்டா? பார்ப்போம்.


சிறிய பொம்மைகளுடன் விளையாடுவது குழந்தைகளின் மோட்டார் திறன்களைக் கூர்மைப்படுத்தும்.  இசைக்கருவிகள் வாசித்தல், எழுதுதல் போன்ற வேலைகளை செய்யும் போது பயன்படுத்தும் அதே திறன் தான். 


அவர்கள் தங்களை பாதிக்கும் விஷயங்களை இம்மாதிரி விளையாடுவதின் மூலம் பல சமயங்களில் சரி செய்து கொள்கிறார்கள். (healing)


அந்த பொம்மைகளை வைத்து பல விதமான விளையாட்டுகள் விளையாடுவார்கள் இல்லையா? அந்த விளையாட்டு அவர்களின் கற்பனைத் திறனை  வளர்க்கிறது.


அது மட்டுமன்றி, தன்னைவிட சிறிய பொம்மைகளை வைத்து விளையாடும் போது, தங்களை பெரிய ஆட்களாக நினைத்துக் கொள்கிறார்கள் குழந்தைகள். அது அவர்களின் personality வலிமையாகவும் உதவுகிறதாம்.


சரி, சீக்கிரம் சின்னச் சின்ன பொம்மைகள் வைத்து விளையாடுவோமா?


❤️

Wednesday, 4 November 2020

விளையாட்டாய் குழந்தை வளர்க்கலாம்!

 விளையாட்டாய் குழந்தை வளர்க்கலாம்!


- Sowmya Red





சிறுவன் ஒருவனுக்கு பள்ளி என்றாலே கொஞ்சம் பதட்டம் இருப்பதை அவனது தாய் கவனிக்கிறார். அவனிடம் அதைப் பற்றி தொடர்ந்து பேசியும் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை. 


ஒரு நாள் தன்னிடம் இருக்கும் பொம்மைகளை மணலில் போட்டு அச்சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.  பொம்மைகளைக் கொண்டு சிறிய வகுப்பறையை அமைக்கிறான்.  வரிசையாய் விலங்கு பொம்மைகளை வைத்த அவன், ஒரு சிறிய நாய் பொம்மையை முக்கியமான இடத்தில் வைக்கிறான். சிறப்பு கவனமாம்! விளையாட்டை பற்றி அவன் தாய்க்கு விளக்குகிறான்


சிறுவன்: அம்மா அவங்க எல்லாரும் ஸ்டூடண்ட்ஸ். இந்த நாய் குட்டி ஸ்டூடண்ட் இருக்கில்ல, அது அதோட அம்மா கிட்ட இருந்து தூரமா வந்து ஸ்கூல்ல இருக்கு. அதான் அது பயபட்டுட்டு இருக்கு. அதுனால அதுக்கு ஸ்பெஷல் இடம்.


அம்மா: ஓ அப்படியா. அம்மா எப்பவும் கூடவே இருக்க முடியாதுல்ல.


சிறுவன்: ஆமாம்மா ஆனா நாய் குட்டிக்கு அம்மா பக்கத்துல இல்லனா பயம் வந்துடும்.


தாய் உடனே நாய்க்கு பக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ பொம்மையை வைக்கிறார்.  


அம்மா: இந்த சூப்பர் ஹீரோ அந்த நாய் குட்டி கூட இருக்காருல்ல. அதுனால அம்மா பக்கத்துல இல்லனாலும் நாய்குட்டி பயப்பட தேவையில்ல.


அன்றிலிருந்து, திரும்பத் திரும்ப நாய்க் குட்டி பொம்மையும், சூப்பர் ஹீரோ பொம்மையும் சேர்த்து வைத்து தொடர்ந்து விளையாடுகின்றனர். ஒரு மாதத்தில், அந்த சிறுவனின் பள்ளி குறித்த பயம் பல மடங்கு குறைந்து, அவன் செயல்பாடுகளில் முன்னேற்றங்கள் தெரிந்தது.


விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. கதைகள் எப்படி பல விஷயங்களை புரிய வைக்கின்றதோ, அதே போல விளையாட்டையும் ஒரு தளமாய் பயன்படுத்த முடியும்.



மலைகள் எனக்கு விருப்பம்!

 உயரம் எனக்கு பிடிக்கும் 

அதிலும் மலைகள் என்றால் பெரு விருப்பம்!

எந்த மலை மீது ஏறி நின்றாலும், உடனே ஒரு மகாராணி போன்ற உணர்வு வந்துவிடும்.

சொந்த ஊரில் இருக்கும்போது, ஏற்காடு மலை செல்வதுண்டு.

மேலே ஏறி நின்று, என்னை நானே அரசியாக எண்ணிக்கொண்டு பல கட்டளைகள் இட்டிருக்கிறேன். சிரிப்பாக இருந்தாலும் ஓர் அரசியைப் போன்ற உணர்வை மலைகள் தருவது என்னளவில் நிஜமே!


எப்போதும் மலை அரசிகள் எனக்குத் துணையாக இருக்கின்றனர்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறார்கள். மலைகள் நகர்வதில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதுவல்ல நிஜம்! 

மலைகள் மனத்துக்குள் நகர்கின்றன.

எந்தவொரு சாதாரணத்தையும் அசாதாரணமாக மாற்றி விடுவதில் மலைகளுக்கு நிகர் மலைகளே!


என்னை அரசியாக மாற்றுவதாலேயே, மலைகள் என்றால் பெரு விருப்பம் எனக்கு!


Tuesday, 3 November 2020

எதிர்மறை எண்ணங்களும் - சிறுவர் விளையாட்டுகளும்!

 



எதிர்மறை எண்ணங்களும் - சிறுவர் விளையாட்டுகளும்! - Sowmya Red


Melissa என்பவருக்கு ஏற்பட்ட அனுபவம் இது. படிகளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தது மெலிசாவின் குழந்தை. திடீரென தவறி விழுந்து உருண்டு கீழே விழுந்து விட, பயத்தில் கத்தி அழுகிறது. அவளது தாயான மெலிசாவும் பயத்தில் கத்தி அழத் தொடங்குகிறார். உடனே அப்பா வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு, ஹாலுக்கு ஓடுகின்றார். சமாதானப்படுத்திவிட்டு எங்காவது அடிபட்டிருக்கிறதா என்று பார்க்கின்றார். குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. உதட்டில் லேசான வீக்கம் மட்டும். Hot packஐ உதட்டின் மேலே வைக்கிறார்கள். 

அதன் பிறகு குழந்தை வினோதமான ஒரு விளையாட்டில் ஈடுபடுகிறது. படிகளில் ஏறி நின்று பொம்மைகளை தூக்கி எறிந்து விளையாடுகிறது. தினமும் இதே விளையாட்டை விளையாடுகிறது. பொம்மைகளை எடுத்து அடுக்கி வைக்க நேர்ந்த அவளது தந்தை கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்கிறார். அப்போது அதைக் கவனிக்கிற தாயார் பொம்மைகளை எடுத்து அவளுக்கு செய்தது போல, காயமிருக்கிறதா என்று தேடுகிறார். அவள் அதை கவனிக்கிறாள். ஹாட் பேக் வைக்கலாமா என்று கேட்க, குழந்தை உடனே ஹாட் பேக்கை எடுத்து பொம்மையின் உதட்டின் மீது வைக்கிறது. இப்படியே ஒரு வாரம் விளையாடிய குழந்தை அதற்கடுத்த அந்த விளையாட்டை விளையாடவில்லை.

பொதுவாக நமக்கும் இது போன்று நம்மை பயமுறுத்தும் நிகழ்வுகள் நடக்கலாம். நாம் புலம்பி தீர்த்துக்கொள்ளவோம். சிலர் அதை மனதில் அழுத்தி traumaவாக மாற்றிக் கொள்கின்றனர். 

ஆனால் இங்கு, தனக்கு நேர்ந்த பயத்தை விளையாட்டின் மூலம் அந்த குழந்தை தீர்க்க முயன்று, வெற்றியும் பெற்றிருக்கிறது. தாய் சரியான நேரத்தில் கவனித்து ஒத்துழைத்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களில் இது மாதிரி healing taskகளை செய்யலாம். 

குழந்தையின் உலகத்தில் நுழைவதற்கு முதல் படியே அவர்களுடன் விளையாடுவதுதான். இத்தகைய விளையாட்டுகளின் மூலம் அவர்கள் மனதில் எந்த வகையான எதிர்மறை உணர்வும் தங்கி விடாமல் பார்த்துக் கொள்ளலாம். 

Saturday, 31 October 2020

மொழி அழிவு

2002ல் UNESCO எடுத்த ஆய்வின் படி, 20ம் நூற்றாண்டில், ஆஸ்தரலேசியா மற்றும் அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அழிவை சந்தித்திருக்கின்றன. 21ம் நூற்றாண்டில் இன்னும் பல நூறு மொழிகள் அழியும் என்று கூறுகின்றனர். 

மொழி அழிவு என்பது ஒரு சில நாளிலோ, மாதங்களிலோ நடப்பது அல்ல. முதலில் பயன்பாட்டுச் சரிவு நடக்கும். பயன்பாட்டுச் சரிவு என்றால் என்ன? 

ஒரு காய்கறி கடையில் பூசணிக்காய் வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். பூசணிக்காய் தேவைப்படும் எல்லோரும், பூசணி வேண்டும் என்று தமிழில் கேட்டால் பயன்பாடு சிறப்பாக இருக்கிறது. தமிழ் தெரிந்தும் எல்லோரும் இன்னொரு மொழியில் கேட்கத் தொடங்கினால் மொழிச் சரிவு. 

நான் இரண்டு வருடங்கள் பெங்களூரில் வேலை பார்த்தேன். கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர்களுமே ஹிந்தியில் பேசுவதை பார்த்திருக்கிறேன். பல மொழிகளை தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஒரு இடத்தில் கூடுவதால் வரும் பிரச்னை இதே. இணைப்பு மொழி தேவைப்படுகிறது. ஆனால் அது கன்னடமாக இல்லாமல், இன்னொரு மொழியாக இருந்தது ஆச்சரியமே.

சரி இப்படியெல்லாம் நடப்பதால் உடனே மொழி அழிந்து விடுமா? இல்லை. ஆனால் அது நிச்சயம் ஓர் ஆரம்பம்.

ஒரே மொழி எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் என்று கூறி சில சமயங்களில் மொழி திணிக்கப்படும்.  அதற்குப் பெயர் Linguistic Homogenization. இது அந்த இடத்தில் உள்ள மற்ற மொழிகளை காலப் போக்கில் கொன்று விடும்.

ஒரு மொழி கலை, மதம், பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் 'மட்டும்' பயன்படுத்தப்பட்டு வந்தால், அது அழிவின் விளிம்பில் இருப்பதாக பொருள்.

ஒரு மொழியின் economical usage குறைந்தால், அந்த மொழி அழிவின் பாதைக்குள் செல்லும். மேலே சொன்ன அதே எடுத்துக்காட்டுகளை பொருத்திப் பார்க்கலாம். பூசணி தேவைப்படும் போது, எல்லா இடங்களிலும் தமிழ் தெரியாவிட்டாலும் வாங்க முடியும் என்றாலோ, சில இடங்களில் தமிழில் சொன்னால் தான் புரியாது, வேற்று மொழியில் சொன்னால் தான் புரியும் என்றாலோ, economical usage குறைந்துள்ளது என்று பொருள். இது அதிகரித்துக் கொண்டே போனால், அது அந்த மொழிக்கு நல்லதல்ல.

பேசப் பேசத் தான் மொழி வாழும். ஒரு மொழியைப் பேசும் மக்கள் அனைவரும் அதைப் பேச வேண்டும். பிற மொழி வார்த்தைகளை தங்கள் மொழிக்கு மொழி பெயர்த்து பயன்படுத்துதல், சமூகப் பயன்பாட்டில் தன் மொழியை அதிகம் பயன்படுத்துதல் போன்றவை மொழி வாழ உதவும்.


Sunday, 25 October 2020

தனிமை பிடிக்கும்!


மனிதர்களற்ற இடங்களில் வாசம் செய்வது என் விருப்பம்...

இந்த கசகசப்புகளில், கட்டுப்பாடுகளில், நம்பிக்கைகளில் இருந்து தப்பித்து,

ஆளற்ற, அரவமற்ற தனிக்காடுகளில் திரிவது என் விருப்பம்.

சின்ன சின்ன பூச்சிகளின் க்ரீச் சத்தங்களும்,

உயர உயர பறக்க விரும்பும் பறவைகளின் பாடல்களும் என் விருப்பம்.

அலையோடு விளையாடி, கால் தொட எத்தனிக்கும் நீரிடமிருந்து தப்பி விளையாடும் சிறிய விளையாட்டுகள் என் விருப்பம்.

தனிமையில் காற்றின் சத்தமும், பதில் பேசும் இலைகளின் சரசரப்பும், என் விருப்பம்.

மனிதர்கள் பிடிக்காதா? பிடிக்கும்..

ஆனால் மனிதர்களற்ற இடம் ரொம்ப பிடிக்கும்..

கட்டுப்பாடுகளற்ற இடம் மிகவும் பிடிக்கும்...

காற்றில் பரவும் வாசம் போல இயல்பாய் வாழ ரொம்ப ரொம்ப பிடிக்கும்.



- சௌம்யா

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb...