2002ல் UNESCO எடுத்த ஆய்வின் படி, 20ம் நூற்றாண்டில், ஆஸ்தரலேசியா மற்றும் அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அழிவை சந்தித்திருக்கின்றன. 21ம் நூற்றாண்டில் இன்னும் பல நூறு மொழிகள் அழியும் என்று கூறுகின்றனர்.
மொழி அழிவு என்பது ஒரு சில நாளிலோ, மாதங்களிலோ நடப்பது அல்ல. முதலில் பயன்பாட்டுச் சரிவு நடக்கும். பயன்பாட்டுச் சரிவு என்றால் என்ன?
ஒரு காய்கறி கடையில் பூசணிக்காய் வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். பூசணிக்காய் தேவைப்படும் எல்லோரும், பூசணி வேண்டும் என்று தமிழில் கேட்டால் பயன்பாடு சிறப்பாக இருக்கிறது. தமிழ் தெரிந்தும் எல்லோரும் இன்னொரு மொழியில் கேட்கத் தொடங்கினால் மொழிச் சரிவு.
நான் இரண்டு வருடங்கள் பெங்களூரில் வேலை பார்த்தேன். கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர்களுமே ஹிந்தியில் பேசுவதை பார்த்திருக்கிறேன். பல மொழிகளை தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஒரு இடத்தில் கூடுவதால் வரும் பிரச்னை இதே. இணைப்பு மொழி தேவைப்படுகிறது. ஆனால் அது கன்னடமாக இல்லாமல், இன்னொரு மொழியாக இருந்தது ஆச்சரியமே.
சரி இப்படியெல்லாம் நடப்பதால் உடனே மொழி அழிந்து விடுமா? இல்லை. ஆனால் அது நிச்சயம் ஓர் ஆரம்பம்.
ஒரே மொழி எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் என்று கூறி சில சமயங்களில் மொழி திணிக்கப்படும். அதற்குப் பெயர் Linguistic Homogenization. இது அந்த இடத்தில் உள்ள மற்ற மொழிகளை காலப் போக்கில் கொன்று விடும்.
ஒரு மொழி கலை, மதம், பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் 'மட்டும்' பயன்படுத்தப்பட்டு வந்தால், அது அழிவின் விளிம்பில் இருப்பதாக பொருள்.
ஒரு மொழியின் economical usage குறைந்தால், அந்த மொழி அழிவின் பாதைக்குள் செல்லும். மேலே சொன்ன அதே எடுத்துக்காட்டுகளை பொருத்திப் பார்க்கலாம். பூசணி தேவைப்படும் போது, எல்லா இடங்களிலும் தமிழ் தெரியாவிட்டாலும் வாங்க முடியும் என்றாலோ, சில இடங்களில் தமிழில் சொன்னால் தான் புரியாது, வேற்று மொழியில் சொன்னால் தான் புரியும் என்றாலோ, economical usage குறைந்துள்ளது என்று பொருள். இது அதிகரித்துக் கொண்டே போனால், அது அந்த மொழிக்கு நல்லதல்ல.
பேசப் பேசத் தான் மொழி வாழும். ஒரு மொழியைப் பேசும் மக்கள் அனைவரும் அதைப் பேச வேண்டும். பிற மொழி வார்த்தைகளை தங்கள் மொழிக்கு மொழி பெயர்த்து பயன்படுத்துதல், சமூகப் பயன்பாட்டில் தன் மொழியை அதிகம் பயன்படுத்துதல் போன்றவை மொழி வாழ உதவும்.
No comments:
Post a Comment