Thursday, 28 November 2019

கொஞ்சம் பொய் கொஞ்சும் காதல் - 1


*

இந்த உலகத்துல அன்புக்கு ஏங்காத மனுஷன் இருப்பானா? ஆனா எப்பவும் அன்புக்கு ஏங்குற மனுஷங்க நிறைய பேர் இருப்போம். யார்கிட்டயும் காட்டிக்க பிடிக்காம சிரிச்சுகிட்டே நாட்களை முடிஞ்சவரை அழகா ஓட்டிடுவோம். ஆனா உள்ளுக்குள்ள இருக்க வெறுமைய என்ன செய்ய முடியும்? அதை நிரப்ப அன்பு வேணுமே. அதுக்கு மனுஷங்க வேணுமே. நமக்கே நமக்குன்னு ஒரு ஆள், நமக்காகவே யோசிக்கற ஒரு மனுஷன் இருக்கறது எவ்வளவு அழகான விஷயம்.

*

விளங்கிக்கொள்ள முடியாத பல முடிச்சுக்களை காதல் போடும்.. அதில் முதல் முடிச்சு, காதல் தான்.. அந்த முடிச்சு விழுற இடமே தெரியாத அளவு குழப்பங்கள்லயும், கவலைகள்லயும் ஆழ்ந்து போயிருந்தேன். ஆமா, இன்னிக்கு வரை நாங்க தொடங்கின இடம் எங்களுக்கு தெரியல..

*

எல்லாருக்கும் தன்னுடைய துணைய பத்தி நிறைய கனவுகள் இருக்கும். அப்படி நானும் நிறைய யோசிச்சிருந்தேன். வாசிக்க தெரிந்த, அத பத்தி இயல்பா உரையாடத் தெரிந்த, ஓவியங்கள ரசிக்க தெரிந்த, first button போடாத டீசன்ட் guyஆ, மாம்பழ கலர்ல, ஒல்லியா, அழகா பேசற, நிறைய எழுதக்கூடியனு நிறைய கற்பனைகள். ஆனா நிஜமா இப்படி எல்லா எதிர்பார்ப்புகளும் ஃபிட் ஆகுற மனுஷன் இருப்பானா? கஷ்டம் தான். நிஜத்துக்கு பழகனும்னு எதிர்பார்ப்புகள எல்லாம் தள்ளி வைக்க தொடங்கிய காலம் அது. ஒவ்வொரு மனுஷனும் ஒவ்வொரு டிசைன். எந்த ஜாடிக்கு எந்த மூடி பொருந்தும்னு யாராலயும் தெளிவா சொல்லிட முடியாது. அந்தந்த மனுஷனுக்கு மட்டும் தான் அது தெரியும். அதே சமயம் எதிர்ல இருக்கவன் நிஜ முகத்த தான் நம்மகிட்ட காட்றானான்னு நமக்கு தெரியாது. ஏதோ ஒருத்தர்கிட்ட தான் அது நடக்கும். ஏன்னா, என் அம்மா அப்பா கிட்ட கூட என் நிஜ இயல்ப காட்டனும்னு நானே நினைச்சதில்ல.. என்ன முகத்த காட்டுனா என்ன வேலை நடக்கும்னு பெரும்பாலான நேரங்கள்ல HR மோடுலயே தான் இருப்பேன். அதுதான் நான். அதுக்குள்ள இருக்க என்னய கண்டெடுக்கற மனுஷன பார்ப்பேன்னு கனவுல கூட நினைச்சதில்ல..

*

யார் ஒருத்தரோட எல்லா இயல்புகளும் நமக்கு பிடிச்சிருக்கோ, அவங்ககிட்ட கோபிக்க வேண்டிய அவசியமே நமக்கு வராது. ஏன்னா, சில நெகடிவ்களையும் இந்த உலகத்துல நாம விரும்பவோம். பர்ஃபெட்டான மனிதர்கள் இல்லயே நாம. நமக்கு பிடிச்ச மனுஷன்கிட்ட, பாசிட்டிவ் மட்டுமில்லாம நெகடிவ்வும் நமக்கு பிடிச்சதாவே இருந்துட்டா?

சந்திக்கும் போது கடல் அலை, பறவைகள் எல்லா freeze ஆகனும்ல.. எங்களுக்கும் ஆச்சு.. ஆனா சந்திக்கும் முன்னாடியே..

***தொடரும்***

Wednesday, 14 August 2019

ஆதலினால் - எஸ்.ரா



அழகிய கட்டுரைகளின் தொகுப்பு. பொதுவாக நம் மிகச் சுலபமாக கடந்து போகக் கூடிய விஷயங்களை, கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், என்ன செய்வோம்? எப்படி உணர்வோம்? அதை எல்லாம் வார்த்தைகளாக கோத்தால் எப்படி இருக்கும்? அப்படியான கட்டுரைகளின் தொகுப்பே இது.

சில கட்டுரைகளை முன்னமே ஒரு முறை படித்தது நினைவில் இருந்தது. கூர்க்காக்களின் வாழ்க்கையை பற்றி நான் ஒருமுறை கூட சிந்தித்து பார்த்தது கிடையாது என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கூர்க்காக்கள் குடும்பத்துடன் இங்கிருப்பவர்கள் என்றே நினைத்து கடந்து இருக்கிறேன் இதுவரை. ஆனால் இந்த கட்டுரையை படித்து முடிக்கும் போது ஒரு மாதிரி கலங்கினார் போலானது.

எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்டிருப்போம் என்பது உண்மைதான். ஆனால் எத்தனை தூரம் நம்மை சுற்றி உள்ள, நம் வாழ்க்கையை சுலபமாக, அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் மனிதர்களை பற்றி சிந்திக்கிறோம் என்றால் கேள்விக்குறி தான்.

நிறைய நுண்ணுணர்வுகளை நாம் கவனிக்க தவறி இருப்போம். சில சமயம் அதை கவனிக்காமல் கடந்து இருப்போம். அதையெல்லாம் மீண்டும் திரும்பிப் பார்க்க ஆசைப்பட்டாலும், சாதாரண விஷயங்களில் இருந்து நாம் கற்கத் தவறிய, கவனிக்க தவறிய பாடங்களையும், அன்பையும் திரும்பிப்பார்க்க, உணர்ந்துகொள்ள நிச்சயம் இந்த கட்டுரைகள் உதவும்.

எந்தக் கட்டுரையையும் சுட்டிக் காட்டி இதுதான் சிறப்பு என்று சொல்லிவிட முடியாது. அப்படி சொல்ல துவங்கினால், எல்லா கட்டுரைகளையும் எழுதி விட வேண்டியிருக்கும். ஒவ்வொன்றுமே முத்துக்கள் ❤

Saturday, 3 August 2019

தாழிடப்பட்ட கதவுகள் - கரீம்



தாழிடப்பட்ட கதவுகள் - கரீம்

அப்போதுதான் இந்தத் தொகுப்பின் முதல் கதையை வாசித்திருந்தேன். நான் பிறந்து சில ஆண்டுகள் கழித்து கோவையில் குண்டுவெடிப்பு கலவரம் என்று ஒன்று நிகழ்ந்தது என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாத எனக்கு, அது மிகப்பெரிய மனக் கலக்கத்தை உண்டு பண்ணியிருந்தது.

தொடர்ந்து படிக்க முடியாமல் மனோவுக்கு போன் செய்தேன்.

'ரொம்ப கஷ்டமா இருக்கு'

'ஏன்? என்ன ஆச்சு? எதையும் நினைச்சு குழப்பிக்காத, எல்லாம் சரியாயிடும்'

ஒரு மாதிரி ஆறுதலாய் உணரவே, தொடர்ந்தேன்.

'இல்ல, அடுத்த புக்க தொடங்கிட்டேன். முதல் கதையே ஒரு மாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு'

'என்ன புக்?'

'தாழிடப்பட்ட கதவுகள்'

'கரீம் எழுதினது தானே? ரிலாக்ஸா படி, நல்லாருக்கும்'

'ம் bye'

பொதுவா இப்படிப் பேசி கொஞ்ச நேரத்துக்கு நல்லா இருக்கும். ஆனால் அப்போதும் ஏதோ போல் இருக்க, யாரிடமும் பேசாமல் லைட்டை அணைத்துவிட்டு, கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். தொடர்ந்து மீண்டும் சில கதைகள் வாசித்து முடிக்க, பாரம் தாங்க முடியாமல் அழுகை வந்தது.

கோவையில் குண்டு வெடிப்பு நடந்த நாள் தொடங்கி, சாதாரணமாய் வாழ்ந்து வந்த இஸ்லாமியர்களின் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் அது புரட்டிப் போட்டது என்று அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவர் நேரில் பார்த்து சொல்வதைப்போல் தொகுக்கப்பட்டவை. அது நடந்த நாட்கள் மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்குப் பின்பும் அதன் தாக்கம் எவ்வாறு இருந்தது, எவ்வாறெல்லாம் அந்த குடும்பங்களை சில விஷமிகளின் விஷ வேலைகள் சிதைத்தன என்பதையெல்லாம், கொஞ்சமும் அதன் உணர்வு குறையாமல் எழுதப்பட்டிருக்கும் கதைகள்.

எந்த கதையும் நம்மை உலுக்காமல் முடியாது.

இப்படி மதம் பார்த்து பழகும் யாரையும் இப்போது பார்க்க முடிவதில்லையே என்று யோசித்தவாறே அந்த நாட்களை யோசித்தால் அந்த மக்களும் அப்படித்தானே வாழ்ந்திருப்பாங்க, ஒண்ணு மண்ணா பழகியிருப்பாங்கனு தோன்றியது.

கூடவே, Newton's first law நினைவுக்கு வந்தது.

"A body at rest will remain at rest, .... , unless it acted upon by an external force"

அதாவது எந்த விசையும் செலுத்தாது இருக்கும்பட்சத்தில், அசையாத பொருள் அசையாமல் தான் இருந்திருக்கும். அவ்வாறே இந்த கலவரத்தில் அந்த விசை தொடங்கும் இடத்தையும் கதையில் இயல்பாய் அடிக்கோடிட்டு காட்டுகிறார் கரீம்.

கத்தி முனையை காட்டிலும் பேனா முனை கூர்ந்தது என்று படித்திருப்போம் அப்படி ஒரு கூர்மையான புத்தகம் "தாழிடப்பட்ட கதவுகள்".

Wednesday, 31 July 2019

பூனாச்சி எனும் வெள்ளாட்டின் கதை

பூனாச்சி எனும் வெள்ளாட்டின் கதை

- பெருமாள் முருகன்



காட்டில் இருந்த கிழவனுக்கு வரம் போல் வந்து வாய்த்தவள் அந்த வெள்ளாட்டுக் குட்டி. உருவம் பொருட்டு, கிழவி அவளை பூனாச்சி என்று செல்லமாய் அழைக்கிறாள். 7 குட்டி ஈனும் அதிசய வகை என்று பகாசுரன் போல் ஒருவன் கொடுத்துச் சென்றது என்று கிழவன் கூறியதை, அது முதன் முறை குட்டி ஈனும் வரை கிழவி நம்பவே இல்லை.

கதை முழுக்க வருத்தத்திற்கு அழும், சந்தோஷத்திற்கு சிரிக்கும் சாதாரண மனிதர்களும், பூனாச்சியும் மட்டுமே.

பூனாச்சி தன் வாழ்வில் 3 முறை சினையாகிறாள். 2வது முறை மட்டுமே தனக்கு விருப்பமான பூவனுடன் சேர்கிறாள். அவனுடன் மட்டுமே வலியின்றி கூடுகிறாள். அவனுடன் மட்டுமே இன்பமாய் உணர்கிறாள். அவனை உரசியவாறு உக்காந்திருப்பதே அவளுக்கு பெரிய ஆனந்தமாய் இருக்கிறது. அவன் குட்டிகளை சுமப்பதைப் பற்றி பேரானந்தமாய் உணர்கிறாள்.

ஆனால் அன்று இரவே பூவன் பலிகொடுக்கப்பட, இறந்து போகும் அளவிற்கு சோர்ந்து போகும் அவள், தன்னுள் இருக்கும் அவன் உயிரைச் சுமப்பதற்காகவே, கிடைத்ததை எல்லாம் தின்று வாழ்கிறாள். பின்பு குட்டிகளின் முகத்தில் பூவனைப் பாத்து அவனையும் அவன் ஸ்ப்ரிசத்தையும் நினைத்துக்கொண்டே இருக்கிறாள்.

பூனாச்சியின் வாழ்க்கையைப் படித்து முடிக்கும் போது ஏதோ ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் படித்து முடித்த உணர்வு நமக்குள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

பூவனின் குட்டிகளுக்குப் பிறகு, தேவைபொருட்டு மூன்றாம் முறை இன்னொரு ஆட்டினைக் கூடும் போதும், பூனாச்சி பூவனையே நினைத்து கொள்கிறாள்.

கடும் வறட்சியில் ஊர் தவித்துக் கொண்டிருக்க, உணவு கிடைக்காமல் வயிற்றில் குட்டிகளுடனே பூனாச்சி இறந்து போகிறாள். சாகும் தருணத்திலும் பூவனையே நினைத்துக் கொள்கிறாள். சட்டென வரும் இந்த முடிவில் மனசு பாரமாகி விடுகிறது . ஆனால் அதன் பின்னான அவள் நினைவுகளும், காதலும் நம்மை அழ வைக்கும்.

அப்படி சாகும்போது நினைத்துக்கொள்ளும் அளவு ஓர் உயிரை நேசித்து வைத்துக்கொள்ள, இந்த வாழ்வில் நமக்கு எத்தனை பெரிய வெளி இருக்கிறது. அப்படி ஓர் உயிரை நமக்காக தேடாத இந்த வாழ்வை வாழ்ந்தென்ன பயன்?

Sunday, 30 June 2019

பாவத்தின் பார்வை


பாவமென்று அறிந்த பின்னும் சலனமற்று நின்றிருந்தாள்..
அத்தை, மாமன், சித்தி என உற்றாரின் ஏச்சுகளை எல்லாம் கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தாள்..
அப்பன் அவளை அடிக்கக்கூட செய்தான்..
அழுத்தமாய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாய்..
ஏச்சுக்களை எல்லாம் கனவிலே தொலைத்துக் கொண்டிருந்தாள்..
அப்பன் அடித்தானே, வலியே இல்லை என்று எண்ணிக்கொண்டே தன்னை தொட்டு பார்த்துக்கொண்டாள்..
ஏனோ அந்த வெறித்த பார்வை மட்டும் இரவெல்லம் அவளை தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது..

#காதல்காரி 

Saturday, 29 June 2019

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்



மனதில் நின்றவர்கள் என்றால், ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு, அக்கம்மாள்  எனஎல்லாரும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள் தான். எவ்வளவு நல்லவங்களா இருக்காங்கல்லனு நினைக்க தோணுது.  ஒவ்வொருவரைப் பற்றியும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய கதாபாத்திரமான ஹென்றி. அவன் மிகவும் நேசிக்கும் அவனது அப்பா சபாபதி பிள்ளையின் வாழ்க்கை, அந்த ஊர், இதெல்லாம் ஹென்றியின் மேல் கொண்ட தாக்கம் என அழகான பின்னலாய் விரியும் கதை. சபாபதியின் மனைவி வேறொருவனை விரும்பி அவனுடன் சென்று விட, குடும்பத்தின் மானம் காக்கும் பொருட்டு ஊரைவிட்டு வெளியேறி இராணுவத்தில் சேர்ந்து விடுகிறார். அதாவது கணவனும், மனைவியும் சேர்ந்து பரதேசம் போனது போல். அவர்களுக்கு குழந்தை இல்லை என்ற காரணம் அவ்வாறு நினைப்பதற்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது.

அங்கு மைக்கேல் நண்பனாய் கிடைக்கிறார். போரில் மைக்கேல் தாக்கப்பட, இறக்கும் தருவாயில் நண்பனான சபாபதி பிள்ளையிடம் தன் மனைவியை பார்த்துகொள்ள சொல்லிவிட்டு இறக்கிறார் மைக்கேல். அந்த அசாதாரண சூழ்நிலையில் இரயிலில் யாருமற்ற குழந்தையாய் ஹென்றி அழுது கிடக்க தங்களுடன் எடுத்துச் சென்று விடுகின்றனர் இந்த தம்பதியினர்.

 தகப்பனும் தாயும் மட்டுமே சூழ வாழ்ந்த இந்த ஏதுமறியா வெள்ளந்தி குழந்தை ஹென்றியின் மீது எதையும் திணிக்காமல் பச்ச மனசோடயே வளர்க்கிறார்.. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு துறவியின் பக்குவம்.. தகப்பனும் தாயும் தவறிய பின், தகப்பன் விவரித்த அவர் ஊருக்கு சென்று, பாழடைந்து போயிருந்த அவரின் வீட்டை அச்சில் வார்த்தார்போல் புதுப்பிக்கிறார்..

இயல்பான தன்மையால் அவனை சுற்றிலும் அன்பான மனிதர்களையும் சேர்த்துக் கொள்கிறார். இதற்கிடையில் புத்தி சுவாதீனமில்லாத ஒரு பெண்ணின் பகுதியும் சேர்கிறது. இந்த புத்தகத்தை ஜெயகாந்தன் எழுதிய இது எழுதியதைப் பற்றி வாசிக்கும் போது அவர் இதை எழுதிக் கொண்டே இருக்க விரும்புவதாகவும், எப்போது முடிக்கப்படும் என்று கேள்வி கேட்கப்பட்ட அடுத்த வாரம் இந்த தொடரை முடித்துவிட்டதாகவும் ஓரிடத்தில் கூறியிருக்கிறார். ஒருவேளை அந்தப் பெண்ணை பற்றி இன்னும் விவரிக்க அவர் எண்ணியிருக்கலாம்.

வீட்டிற்கு மின்சார வசதி பெறலாம் என்று தேவராஜன் கூறும்போது, அகல் விளக்கின் ஒளி போதும் என்று அவன் கூறுகையில் ஹென்றியின் சொல்லபடாத அமைதி உணர்வு நமக்கும் கடத்தப்படுகிறது. அவனுக்குள் இருக்கும் இயல்பான தன்மையும் எந்த திணிப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் அதேசமயம் யாரையும் வருந்த வைக்காமல் இருக்கும் அவன் இயல்பு எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. வளைந்து கொடுக்கும்படியாக இருப்பதே தனது கொள்கை என்று அவன் கூறுவது யோசித்துப் பார்க்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. முழுமையாக ஒருநாள் அப்படி கடத்தமுடியுமா என்றால், இப்போதிருக்கும் மனநிலைக்கு கஷ்டம்தான். ஹென்றியை எல்லோருக்கும் பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது அந்த கொள்கை என்றும் கூறலாம். எல்லோரும் நிச்சயம் ஒருமுறையாவது படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.

Friday, 28 June 2019

Parallel Reading


எப்பவும் ஒரே விஷயத்துல மூழ்கி முத்தெடுப்பது எனக்கு சின்ன வயசுல இருந்தே வரல.. அதனாலயே multi tasking எனக்கு பிடித்தமான & நல்லா வரக்கூடிய விஷயமும் கூட.. இந்த parallel readingம் அப்படிதான் பாக்கறேன்..
ஒரு சமயத்தில் 2-3 புத்தகங்கள் வாசிப்பது நிறைய வசதிகள் கொண்டது. புத்தகம் சுமக்க முடியாத நேரத்தில் போனில் உள்ள புத்தங்களையும், வீட்டில் வேறு புத்தகமும் படிக்கலாம்.. மனநிலைக்கு ஏற்றாற்போலும்.. ❤
ஒரு சமயம் ஒரு புத்தகத்தில் நமக்கு ஏதோவொரு காரணமாக தொய்வு ஏற்பட்டாலும், பெரிய இடைவெளி எதுவும் இல்லாமல் சட்டென்று mood recover பண்ணிக்கலாம்.. அதே சமயம் நிறையவும் படிக்கலாம்.
சில சமயம் அந்த புத்தங்களுக்கிடையில் நாமே ஒரு பின்னல் ஏற்படுத்திக்கொண்டு புது சிந்தனைகள், ஐடியாக்களை கூட உருவாக்குவோம்.. நல்லாயிருக்கும் 😍

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb...